விநாயகர் (VINAYAGAR)
விநாயகர் துதி
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.
– திருமூலர் (திருமந்திரம்)
ஐந்து கைகளையும், யானை போன்ற முகத்தையும், இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத்தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக உள்ளவனுமான விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் போற்றுகின்றேன்.
அருஞ்சொல் விளக்கம்
இந்து | சந்திரன் |
எயிறு | தந்தம், பல், கொம்பு |
நந்தி | சிவபெருமான் |
புந்தி | மனம் |
நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் விநாயகர் பெற்றதால், ஐந்து கரத்தன் என அழைக்கப்பட்டார். தந்தம் வளைந்து இருப்பதால் பிறைச்சந்திரன் போன்ற தந்தம் எனப்பட்டது. பிறைச்சந்திரன் வடிவம் வளைவுடையது. விநாயகர் என்பார் பிரணவ வடிவினர் ஆவர்.
Table of Contents
விநாயகர் யார்?
விநாயகர் என்ற சொல்லுக்கு வி – இல்லாமை. நாயகன் – தலைவன் விநாயகர் என்றால் மேலான தலைவர்.
தனக்கு மேல் தலைவன் இல்லாதவர் என்று பொருள். ஓம் அநீஸ்வராய நமஹ என்னும் மந்திரத்திற்கு தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர். அதாவது தனக்கு மேல் ஒரு ஈஸ்வரன் இல்லாதவர் என்பதே பொருளாகும்.
ஸ்ரீ ஆதி சங்கரர் தாம் அருளிய “கணேச பஞ்சரத்னம்” என்ற நூலில் கணபதியை அநாயகைக நாயகம் என்று போற்றுகின்றார். அநாயக – ஏக – நாயகம். அதாவது தனக்கு மேல் ஒரு நாயகரில்லாமல் தானே ஏக நாயகனாக இருப்பவர் என்பது இதன் பொருளாகும்.
தன்னை வழிபடுவோரின் விக்கினங்களை அதாவது இடையூறுகளைப் போக்குவதால் விநாயகருக்கு விக்னேஸ்வரன் என்றும் அனைத்து கணங்களுக்கு தலைவராயிருப்பதால் கணநாதன் மற்றும் கணபதி என்றும் அழைக்கப்படுகிறார்.
விநாயகர் பற்றிய தகவல்கள்
விநாயகரின் வெவ்வேறு பெயர்கள் (விநாயகர்): விநாயகர், ஆனை முகன், கணபதி, பிள்ளையார், ஐங்கரன், மயூரேசர், விகடர், சர்வாயுதர், கபிலர்
விநாயகரின் தமிழ் பெயர் | பிள்ளையார் |
விநாயகரின் சமஸ்கிருதம் பெயர் | கணேஷா |
விநாயகரின் பெற்றோர்கள் | சிவபெருமான், பார்வதி தேவி (உமா மகேஸ்வரி) |
விநாயகரின் சகோதரன் | முருகப்பெருமான் |
விநாயகரின் மனைவி | சித்தி மற்றும் புத்தி |
விநாயகரின் குழந்தைகள் | சுபன், லாபன் மற்றும் சந்தோசி மாதா |
விநாயகரின் வாகனம் | மூஷிகம் என்கிற சுண்டெலி (மூஞ்சூறு) |
விநாயகர் மந்திரம் | ஓம் கணேசாய நமஹ |
விநாயகரின் ஆயுதங்கள்
தந்தம், சக்கரம், சம்மட்டி, சூலம், கத்தி, சத்தி(வேல்), கேடகம், வேதாளம், நாகபாசம், அம்பு, கதாயுதம், வில், குந்தாலி, அங்குசம், பாசம், மழு முதலான அனைத்து ஆயுதங்களும் விநாயகரின் ஆயுதங்கள் ஆகும்.
அதிபதி
- உலகில் உள்ள அனைத்திற்கும், பூதகணங்களுக்கும் அதிபதி.
- புதிய தொடக்கம் மற்றும் நிறைவேறுதல், மகிழ்ச்சி ஆகியவைக்கான அதிபதியாக செயல்படுகிறார்.
விநாயகர் பற்றிய நூல்கள்
- கணேச புராணம்
- விநாயகர் அகவல்
- கணேச பஞ்சரத்னம்
விநாயகரை பின்பற்றும் சமயத்தார்கள்
இந்து சமயத்தைச் சார்ந்தவர்களும் மற்றும் இந்து சமயத்தில் காணாதிபத்தியம் என்கிற பிரிவில் உள்ளவர்களும் விநாயகரை பின்பற்றுகிறார்கள்.
விநாயகரை முழுமுதற் கடவுளாக வழிபடும் சமயம் – காணாதிபத்தியம்.
இந்தக் காணாதிபத்தியம் ஆனது பின்னாளில் சைவ சமயத்தோடும் மற்றும் வைணவ சமயத்தோடும் ஒன்றிணைந்தது.
வைணவர்கள் விநாயகரைத் “தும்பிக்கை ஆழ்வார்” என்று அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விநாயகர் பெருமைகள்
விநாயகர் வரலாறு
விநாயகர் அகவல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பும் பல இசை பாட
பொன்னரைஞானம் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்த ழகறிப்ப
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேல முகமும் விளங்கு சிந்தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச்சுவடும்
இரண்டு செவியும் இலங்கு பொன்முடியும்
திரண்ட முப்புரி திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்து துரிய மெய்ஞானம்
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூசிக வாகன
இப்பொழு தென்னை ஆட்கொள்ள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்க அறுத்துத்
திருந்திய முதல் ஐந்து எழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து!
குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்
தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்து
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து
தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்து அங்குச நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்
குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்
புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்து எனக்கருள் செய்து
முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்து
இருள்வெளி யிரண்டுக்கு ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்து அழுத்தியென் செவியில்
எல்லை யில்லா ஆனந்தம் அளித்து
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்கு அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்க்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!!!
ஔவையார் அருளிய விநாயகர் அகவல்
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும்பெருக்கும் உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை .
வாக்குண்டாம்; நல்ல மனம் உண்டாம்; மாமலராள்
நோக்குண்டாம்; மேனி நுடங்காது – பூக்கொண்டு
துப்பார் திருமேனித் தும்பிக்கை யான்பாதம்
தப்பாமற் சார்வார் தமக்கு
– ஔவையார்
விநாயகருக்கு உகந்த நாள்
- திங்கட்கிழமை
- வெள்ளிக்கிழமை
- சதுர்த்தி திதி
- விநாயகர் சதுர்த்தி நாள்
- சங்கடஹர சதுர்த்தி நாள்
விநாயகர் வகைகள்
பொதுவாக யானைமுகமும், மனித உடலுமாகக் காட்சியளிக்கும் விநாயகப் பெருமான், பல்வேறு வடிவங்களிலும் கோயில்களில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
நரமுக விநாயகர் – மனித முகத்துடன் காட்சியளிக்கும் விநாயகர் நரமுக விநாயகர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூரிலிருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் நன்னிலம் வட்டத்தில் அமைந்துள்ள திலதர்ப்பணப்புரியிலுள்ள சிவாலயத்தில் தனிச் சந்நிதியில் மேற்கு நோக்கி தும்பிக்கையின்றி மனிதமுக விநாயகர் தரிசனம் தருகிறார்.
இங்கு நரமுக விநாயகர் மனித உருவத்தோடு பாசம், அங்குசம், அபயஹஸ்தமாக ஆனந்த முத்திரையுடன் கூடிய கைகளோடு, இடதுகையை இடது காலின்மீது வைத்தபடி பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சிதலப்பதி முத்தீசுவரர் கோயிலில் உள்ள விநாயகப் பெருமான் தும்பிக்கையின்றி மனித உருவில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
சிதலப்பதி முத்தீசுவரர் கோயில் உள்ள இடம்:
ஊர்: சிதலப்பதி (செதலபதி)
மாவட்டம்: திருவாரூர்
நடன கணபதி, நர்ததன கணபதி – நடனமாடும் விநாயகர்.
சித்தி, புத்தி கணபதி – மனைவிகளான சித்தி மற்றும் புத்தி ஆகியோருடன் காட்சியளிப்பவர்.
32 விநாயக மூர்த்தங்கள்
- உச்சிட்ட கணபதி
- உத்தண்ட கணபதி
- ஊர்த்துவ கணபதி
- ஏகதந்த கணபதி
- ஏகாட்சர கணபதி
- ஏரம்ப கணபதி
- சக்தி கணபதி
- சங்கடஹர கணபதி
- சிங்க கணபதி
- சித்தி கணபதி
- சிருஷ்டி கணபதி
- தருண கணபதி
- திரயாக்ஷர கணபதி
- துண்டி கணபதி
- துர்க்கா கணபதி
- துவிமுக கணபதி
- துவிஜ கணபதி
- நிருத்த கணபதி
- பக்தி கணபதி
- பால கணபதி
- மஹா கணபதி
- மும்முக கணபதி
- யோக கணபதி
- ரணமோசன கணபதி
- லட்சுமி கணபதி
- வர கணபதி
- விக்ன கணபதி
- விஜய கணபதி
- வீர கணபதி
- ஹரித்திரா கணபதி
- க்ஷிப்ர கணபதி
- க்ஷிப்ரபிரசாத கணபதி
சங்கடஹர சதுர்த்தி என்றால் என்ன ?
பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காம் நாள் சதுர்த்தி திதியே மாத சங்கடஹர சதுர்த்தி எனப்படுகிறது.
சங்கட என்றால் துன்பம், ஹர என்றால் அழித்தல். அதாவது துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி ஆகும்.
ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதம் இருந்தால் குடும்பத்தில் சுபிட்சமும் மற்றும் தடைகளின்றி எல்லா காரியங்களும் வெற்றியடையும்.
விநாயகர் சதுர்த்திக்கு முன்னதாக வரும் சங்கடஹர சதுர்த்தி மஹா சங்கடஹர சதுர்த்தி எனப்படும்.
சந்திரன் விநாயகரின் உருவத்தை கேலி செய்ததற்கு பதிலாக சந்திரனின் ஆணவத்தைக் கண்டித்து சாபமிட்டார் விநாயகப்பெருமான். அதனால் சந்திரன் ஒளி இழந்து விட்டார்.
தன்னைக் கிண்டல் செய்த ஆணவம் ஒழிந்த சந்திரன் இந்த சதுர்த்தி நாளில்தான் சாபம் நீங்கி அனுக்கிரஹம் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே இந்த நாளில் விநாயகரை தரிசித்து விட்டு சந்திரனைக் காணலாம் என்று சொல்லப்படுகிறது.
சந்திரன் தன் தவறை உணர்ந்ததால் சிவன் 15 நாட்கள் வளர்ந்தும் தேய்ந்தும் காட்சி தருமாறு கூறினார். அதனால் விநாயகருக்கு உகந்த நாளான சதுர்த்தி தினத்தில் சந்திரோதயம் போது இருவரையும் வணங்கினால் நம் சங்கடங்கள் தீரும்.
இந்த சிறப்பான சங்கடஹர சதுர்த்தி விரதத்தை அனுஷ்டித்தே அங்காரகன் என்ற செவ்வாய், நவகிரகங்களில் ஒரு கிரகமாக பதவியை அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், புருகண்டி முனிவர் ஆகியோர் சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்து விநாயகரின் அருளைப் பெற்றனர். சிவனைப் பிரிந்த பார்வதி தேவி இந்த விரதத்தை மேற்கொண்டுதான் சிவனை அடைந்தார் என்றும் கூறப்படுகிறது.
பண்டைய மகிஷ்மதி நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்ட ஹேஹேய நாட்டின் மன்னன் கிருதவீரியன் இந்த சங்கடஹர சதுர்த்தி தினத்தில் விரதம் மேற்கொண்டுதான் கார்த்தவீரிய அருச்சுனன் என்ற மகனைப் பெற்றான். பாண்டவர்கள்கூட இந்த விரதம் இருந்தே வெற்றி பெற்றனர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
விநாயகர் ஸ்லோகம்
“பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்து தூமணியே
நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா!”
“விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்
விநாயகனே வேட்கை தணிவிப்பான் விநாயகனே
விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்
தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து”
காசிப முனிவர் அருளிய விநாயகர் கவசம்
வளர்சிகையைப் பராபரமாய் வயங்கு
விநாயகர் காக்க
வாய்ந்த சென்னிஅளவுபடா அதிகசவுந் தரதேக
மகோற்கடர்தாம் அமர்ந்து காக்க
விளரற நெற்றியை என்றும் விளங்கிய
காசிபர் காக்க
புருவந்தம்மைத் தளர்வில் மகோதரர்காக்க
தடவிழிகள் பாலசந்திரனார் காக்க.
கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
காலங்கணக் கிரீடர் காக்க
நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க
அவிர்நகை மின் முகர் காக்க
அள் எழிற் செஞ் செவிபாச பாணி காக்க.
தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.
காமருபூ முகந்தன்மைக் குணேசர்நனி காக்க
களக் கணேசர் காக்க
வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க
பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க
பிருட்டத்தைப் பாவம் நீக்கும்விக்கினகரன் காக்க
விளங்கிலிங்கம் வியாள பூடணர்தாம்
தக்ககுய்யந் தன்னைவக் கிரதுண்டர் காக்க
சகலத்தை அல்லல் உக்கண பன் காக்க
ஊருவை மங்களமூர்த்தி உவந்து காக்க
தாள்முழந்தாள் மகாபுத்தி காக்க
இரு பதம்ஏக தந்தர் காக்க
வாழ்கரம் க்ஷிப்பிரப் பிரசாதனர் காக்க
முன்கையை வணங்கு வார்நோய்
ஆழ்தரச்செய் ஆசாபூரகர் காக்க
விரல்பதும அத்தர் காக்க
சேழ்கிளரும் நகங்கள் விநாயகர் காக்க
கிழக்கினிற் புத்தீசர் காக்க
அக்னியில் சித்தீசர் காக்க
உமா புத்திரர்தென் திசை காக்க
மிக்கநிரு தியிற்கணே சுரர் காக்க
விக்கினவர்த்தனர்மேற் கென்னுந் திக்கதனிற் காக்க
வாயுவிற் கசகர்ணன் காக்க
திகழ்உதீசி தக்கநிதிபன் காக்க
வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க
ஏகதந்தர் பகல்முழுதும் காக்க
இர வினும்சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக் கினகிருது காக்க
இராக் கதர்பூதம் உருவேதாளம்
மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரும் முடிவிலாத வேகமுறு பிணிபலவும்
விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க
மதிஞானம் தவந்தானம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிரகம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
காமர்பவுத் திரர் முன்னான
விதியாரும் கற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
வென்றி சீவிதம் கபிலர் காக்க
கரி யாதியெல்லாம் விகடர் காக்க
என்றிவ்வா றிதுதனை முக்காலமும்
ஓதிடினும் பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள்
யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற வச்
சிரதேக மாகி மின்னும்!!
அகத்தியர் அருளிய விநாயகர் மந்திரம்
“ஆமப்பா அஷ்டதிசைக் கரசாய்நின்ற
அருமையுள்ள புலத்தியனே சொல்லக்கேளு
ஓமப்பா ஆதிகண பதிதானொன்று
உறுதியுள்ள மகாகண பதிதானொன்று
தாமப்பா நடனகண பதிதானொன்று
சங்கையுள்ள சக்திகண பதிதானொன்று
நாமப்பா சொல்லுகிறோம் ஒன்றாய்க் கேளு
நன்மையுள்ள வாலகண பதிதானொன்றே.”
“ஒன்றான உச்சிட்ட கணபதிதானொன்று
உத்தமமே உக்கிரகண பதிதானொன்று
நன்றான மூலகண பதிதானொன்று
நாட்டமுட அஷ்டகண பதிக்குமொன்றாய்க்
குன்றாத மூலமந்திர சூக்ஷந்தன்னைக்
குறிப்புடனே சொல்லுகிறேன்குணமாய்க்கேளு
நின்றாடு மூலமடா ஆதிமூலம்
நிலையறிந்து ஓம்கிலி அங்உங்கெண்ணே”
கண் திருஷ்டி கணபதி மந்திரம்
ஓம் ஸ்ரீம் கம் கணபதியே நம
க்ரஹ திருஷ்டி தோஷம்
நிவர்தய நிவர்தய ஸ்வாஹா!!
லட்சுமி கணபதி காயத்ரி மந்திரம்
“ஓம் கம் ஸ்ரீம் சர்வ சித்தி ப்ராத்யே
ஸ்ரீம் கம் நமஹ”
“ஓம் ஸ்ரீம் கம் சௌம்யாய லட்சுமி கணபதயே
வரவரத சர்வதனம்மே வசமானய ஸ்வாஹா”
வெற்றிதரும் விநாயகர் மந்திரம்
முஷீக வாகன மோத ஹஸ்த
சாமர கர்ண விளம்பித சூத்ர
வாமன ரூப மகேஸ்வர புத்ர
விக்ன விநாயக பாத நமஸ்தே
சித்தி விநாயகர் துதி
“சக்தி யாய்சிவ மாகித் தனிப்பர
முக்தி யான முதலைத் துதிசெயச்
சுத்தி யாகிய சொற்பொருள் நல்குவ
சித்தி யானைதன் செய்யபொற் பாதமே”
விநாயகர் 108 போற்றி மந்திரம்
ஓம் அத்தி முகனே போற்றி
ஓம் அம்பிகைச் செல்வா போற்றி
ஓம் அம்மையே அப்பா போற்றி
ஓம் அருமறைக் கொழுந்தே போற்றி
ஓம் அமரர்கள் கோனே போற்றி
ஓம் அடியார்க்கு இனியோய் போற்றி
ஓம் அங்குச பாஸா போற்றி
ஓம் அரு உருவானாய் போற்றி
ஓம் ஆறுமுகன் அண்ணா போற்றி
ஓம் அணுவினுக்கு அணுவே போற்றி
ஓம் அண்டங்கள் ஆனாய் போற்றி
ஓம் அவல், பொரி, அப்பம், அருந்துவோய் போற்றி
ஓம் பிட்டும், முப்பழமும் நுகர்வாய் போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆருயிர்க்குயிரே போற்றி
ஓம் ஆரா அமுதா போற்றி
ஓம் இருள் தனைக் கடிவாய் போற்றி
ஓம் இடையூறு களைவாய் போற்றி
ஓம் இன்பத்தின் பெருக்கே போற்றி
ஓம் இருவினை அறுப்பாய் போற்றி
ஓம் ஈசனார் மகனே போற்றி
ஓம் ஈரேழாம் உலகா போற்றி
ஓம் உத்தமக் குணாளா போற்றி
ஓம் உலகெலாம் காப்பாய் போற்றி
ஓம் உண்மை நெறியாளா போற்றி
ஓம் உம்பர்கள் தொழுவாய் போற்றி
ஓம் ஊழ்வினை ஒழிப்பாய் போற்றி
ஓம் எங்குமே நிறைவாய் போற்றி
ஓம் என்றுமே திகழ்வாய் போற்றி
ஓம் எங்குமே அமர்ந்தாய் போற்றி
ஓம் எவர்க்குமே அருள்வாய் போற்றி
ஓம் எதையுமே முடிப்பாய் போற்றி
ஓம் எண்குண சீலா போற்றி
ஓம் எழு பிறப்பறுப்பாய் போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஏக நாயகனே போற்றி
ஓம் எழில் மிகு தேவே போற்றி
ஓம் ஔவையார்க் கருள்வாய் போற்றி
ஓம் ஐங்கர முடையாய் போற்றி
ஓம் ஐம்புலன் அடக்குவாய் போற்றி
ஓம் நான்கு நற் புயத்தாய் போற்றி
ஓம் நாவலர் பணிவாய் போற்றி
ஓம் முக்கண்கள் உடையாய் போற்றி
ஓம் முழு முதற் பொருளே போற்றி
ஓம் ஒளி மிகு தேவே போற்றி
ஓம் ஓங்கார மூர்த்தி போற்றி
ஓம் கணத்து நாயகனே போற்றி
ஓம் கருணையார் மூர்த்தியே போற்றி
ஓம் கலைஞானக் குருவே போற்றி
ஓம் கயமுகனைக் காய்ந்தாய் போற்றி
ஓம் கற்பக களிறே போற்றி
ஓம் கண்கண்ட தேவே போற்றி
ஓம் கந்தனை வென்றாய் போற்றி
ஓம் கனிதனைப் பெற்றாய் போற்றி
ஓம் சங்கத்துத் தமிழே போற்றி
ஓம் சரவணன் தொழுவாய் போற்றி
ஓம் சர்வ லோகேசா போற்றி
ஓம் சாந்தமார் மூர்த்தி போற்றி
ஓம் சுருதியின் முடிவே போற்றி
ஓம் சொற்பதம் கடந்தாய் போற்றி
ஓம் நம்பிக்கு அருள்வாய் போற்றி
ஓம் நாதனே கீதா போற்றி
ஓம் தவசிகள் தொழுவாய் போற்றி
ஓம் தாயினும் நல்லாய் போற்றி
ஓம் தரும குணாளா போற்றி
ஓம் தம்பிக்கு வள்ளியைத் தந்தாய் போற்றி
ஓம் தூயவர் துணைவா போற்றி
ஓம் துறவிகள் பொருளே போற்றி
ஓம் நித்தனே நிமலா போற்றி
ஓம் நீதி சால் துரையே போற்றி
ஒம் நீல மேனியனே போற்றி
ஓம் நிர்மலி வேனியா போற்றி
ஓம் பேழை நல் வயிற்றாய் போற்றி
ஓம் பெரிச்சாளி வாகனா போற்றி
ஓம் பாரதம் வரைந்தாய் போற்றி
ஓம் பாவலர் பணிவாய் போற்றி
ஓம் பாசத்தை அறுப்பாய் போற்றி
ஓம் பாவப்பிணி ஒழிப்பாய் போற்றி
ஓம் மும்மலம் அறுப்பாய் போற்றி
ஓம் முத்தியை தருவாய் போற்றி
ஓம் வேழ முகத்தாய் போற்றி
ஓம் வேட்கையை தணிவிப்பாய் போற்றி
ஓம் வேள்வியின் முதல்வா போற்றி
ஓம் வேதாந்த விமலா போற்றி
ஓம் ஒழுக்கமது அருள்வாய் போற்றி
ஓம் உடல் நலம் தருவாய் போற்றி
ஓம் செல்வம் தருவாய் போற்றி
ஓம் செறுக்கினை அழிப்பாய் போற்றி
ஓம் சிந்தனையை அடக்குவாய் போற்றி
ஓம் சினம், காமம், தவிர்ப்பாய் போற்றி
ஓம் கல்வியை அருள்வாய் போற்றி
ஓம் கரத்தலை ஒழிப்பாய் போற்றி
ஓம் ஒளவியம் அகற்றுவாய் போற்றி
ஓம் அறநெறி புகட்டுவாய் போற்றி
ஓம் அவாவினை அடக்குவாய் போற்றி
ஓம் அன்பினை வளர்ப்பாய் போற்றி
ஓம் ஊக்கமது அருள்வாய் போற்றி
ஓம் அமிர்த கணேசா போற்றி
ஓம் ஆக்கம் பெருக்குவாய் போற்றி
ஓம் வலம்புரி விநாயகா போற்றி
ஓம் வரமெல்லாம் தருவாய் போற்றி
ஓம் சித்தி விநாயகா போற்றி
ஓம் சிவபதம் அருள்வாய் போற்றி
ஓம் சுந்தர விநாயகா போற்றி
ஓம் சுக போகம் தருவாய் போற்றி
ஓம் அனைத்து ஆனாய் போற்றி
ஓம் ஆபத் சகாயா போற்றி
ஓம் அமிர்த கணேசா போற்றி
விநாயகர் துதி மந்திரம்
விநாயகர் துதி
“ஐந்து கரத்தினை ஆனைமுகத்தினை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே”
– திருமூலர்( திருமந்திரம்)
பாடல் பொருள்:
ஐந்து கைகளுடனும், யானை முகத்துடனும் சந்திரனின் இளம்பிறையைப் போன்ற நெற்றியை உடைய சிவனின் மகனை அறிவுச்சுடரை எனது மனதில் வைத்து அவரது திருவடிகளை போற்றுகின்றேன்.
அஷ்ட (எட்டு) கணபதி வகை
ஆதி கணபதி
மகா கணபதி
நடன கணபதி
சக்தி கணபதி
பால கணபதி
உச்சிட்ட கணபதி
உக்கிர கணபதி
மூல கணபதி
அஷ்ட கணபதியை வணங்கும் மூல மந்திரம்
“ஓம் கிலி அங் உங்”
வேலை கிடைக்க செய்யும் விநாயகர் மந்திரம்
ஓம் கம் கணபதயே விக்ன விநாஷினி ஸ்வாஹா
விநாயகர் பூஜை மந்திரம்
விநாயகப்பெருமானின் முக்கிய 16 மந்திரங்கள்
ஓம் சுமுகாய நமஹ !
ஓம் ஏகதந்தாய நமஹ !
ஓம் கபிலாய நமஹ !
ஓம் கஜகர்ணாய நமஹ !
ஓம் லம்போதராய நமஹ !
ஓம் விகடாய நமஹ !
ஓம் விக்னராஜாய நமஹ !
ஓம் விநாகாய நமஹ !
ஓம் தூமகேதவே நமஹ !
ஓம் கணாத்யக்ஷாய நமஹ !
ஓம் பாலச்சந்தராய நமஹ !
ஓம் கஜாநாய நமஹ !
ஓம் வக்ர துண்டாய நமஹ !
ஓம் சூர்ப்பகர்னாய நமஹ !
ஓம் ஹேரம்பாய நமஹ !
ஓம் ஸ்கந்த பூர்வஜாய நமஹ !
ஓம் சித்தி விநாயகா நமஹ !
ஓம் ஸ்ரீ மகா கணபதியே நமஹ !
விநாயகர் காயத்ரி மந்திரம்
ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்!!
ஓம் தத்புருஷாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி
தந்நோ தந்தி ப்ரசோதயாத்!!
விநாயகர் காயத்ரி மூல மந்திரம்
“வக்ர துண்டாய ஹீம்
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.”
சக்தி வாய்ந்த விநாயகர் மந்திரம்
ஓம் என்னும் ப்ரணவ ரூப விநாயகா
உமையவளின் பாலனே விநாயகா
தேவர் மூவர் போற்றும் வேத விநாயகா
தேவாதி தேவனே விநாயகா
வல்வினைகள் தீர்க்கும் சக்தி விநாயகா
வேண்டும் வரம் தந்திடும் விநாயகா
மௌனத்தின் முழுப்பொருளே விநாயகா
முக்கண்ணன் மைந்தனே விநாயகா
பக்தர்களின் உறைவிடமே விநாயகா
சர்வ சக்திகளின் பிறப்பிடம் விநாயகா
முக்திதனை அளித்திடுவாய் விநாயகா
உனை நித்தம் பணிந்திடுவோம் விநாயகா
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
FAQ
விநாயகரின் முக்கிய விழா ?
விநாயகர் சதுர்த்தி
பிள்ளையார் சுழி போடுவது ஏன் ?
பிள்ளையார் சுழி என்பது சிவசக்தியின் சேர்க்கையாக கருதப்படுகிறது.
பிள்ளையார் தடைகளை நீக்குபவர் என்பதால், நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் தடையில்லாமல் நடக்கப் பிள்ளையாரை வணங்கி அல்லது பிள்ளையார் சுழி – உ போட்டுத் தொடங்க வேண்டும் என்பது வழக்கம்.
இதன் மூலம் நாம் செய்யும் அல்லது செய்ய இருக்கும் செயல்களில் தடைகள் எதுவும் ஏற்படாமல் பிள்ளையார் நம்மை வழிநடத்துவார்.
விநாயகர் சதுர்த்தி ஏன் கொண்டாடப்படுகிறது ?
முழுமுதற் கடவுளும், சிவபெருமானின் மகனுமான விநாயகர் அவதரித்த தினமே விநாயகர் சதுர்த்தி தினம். விநாயகர் சதுர்த்தி விழாவானது ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.
புராணப்படி, அரக்கர்களின் கொடுமையில் இருந்து தங்களை காத்திட தேவர்கள் சிவபெருமானிடம் தவமிருந்து முறையிட்டதன் விளைவாக தடைகளை தகர்த்தெறியும் ஆற்றலுடன் சிவன் மற்றும் பார்வதி தேவியால் உருவாக்கப்பட்டவர் தான் விநாயகப் பெருமான்.
விநாயகப் பெருமான் ஒரு ஆவணி மாத சதுர்த்தியன்று யானை முகத்தோடும், மனித உடலோடும் அரக்கன் கஜமுகாசுரனை அழித்து தேவர்களை மீட்டார். எனவே, அன்று முதல் இந்த தினத்தை விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடுகின்றனர்.
இந்தியாவில் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடும் மாநிலங்கள் ?
மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் கோவா ஆகிய மாநிலங்கள் விநாயகர் சதுர்த்தியை வெகு சிறப்பாக பத்து நாட்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை திருவிழாவாக கொண்டாடும் நாடுகள் ?
இந்தியா, நேபாளம், அமெரிக்கா, மொரீசியஸ்
விநாயகர் பற்றி ஔவையார் பாடியது ?
“விநாயகர் அகவல்” என்னும் நூலை ஔவையார் இயற்றினார்.
“விநாயகர் அகவல்” பாடிய ஔவையார் பொ.ஆ 8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விநாயகர் அகவலில் விநாயகப் பெருமான் தோற்றம் மற்றும் யோகாசன மூச்சுப் பயிற்சி போன்ற செய்திகள் கூறப்பட்டுள்ளன.
Fantastic history. Hearty thanks sir.
Thank you sir for your feedback
ஓம் நமச்சிவாய நமஹ..
🙏
விநாயகரை பற்றிய
அனைத்து தகவல்களையும் எளிய முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள், மற்றும்
எல்லா மந்திரமும் பாடல்களும் அருமை.நன்றி.வாழ்க வளமுடன்
.ஓம் விநாயகா போற்றி!🙏
Thank you Mam for your feedback 🙏
Superb 🙏sir … Your information has been of great benefit to me …thankyou 👍❤️
Thank you Sir for your feedback 🙏
அருமையான தகவல்கள் 🙏 நன்றி
Thank you Sir for your feedback 🙏
Excellent source of information
Religious info in one platform now.
In tamil is the added advantage
Thank you Mam for your feedback 🙏
Vaazgha valamudan.
Valarga Erai unarvudan.
You have done a great service to people know more about Pranava God.
Stay blessed paa.
Thank you Mam 😊